இந்தியா

கொல்கத்தா துர்கா பூஜை பந்தல் விபத்து - காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார் அமித் ஷா

வெற்றி மயிலோன்

கொல்கத்தா: கொல்கத்தாவின் சோர்பகன் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கொல்கத்தாவின் சோர்பகன் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட நெரிசலில் 19 பேர் உயிரிழந்தனர், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி ஆகியோர் கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றனர்.

அங்கு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தனர். பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலை குறித்து மருத்துவர்களும் விளக்கம் அளித்தனர். இதையடுத்து, இது தொடர்பாக அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கொல்கத்தாவில் உள்ள சர்பாகன் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பக்தர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து, அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தேன்.

இந்த இக்கட்டான சூழலில், காயமடைந்த ஒவ்வொரு நபருக்கும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் மேற்கு வங்க அரசு உறுதுணையாக நிற்கும். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய துர்கா தேவியிடம் பிரார்த்திக்கிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சோர்பகன் சர்வஜனீன் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர் என்ற மிகவும் துயரமான செய்தியை அறிந்தேன். இது குறித்து முதல்வர் சுவேந்து அதிகாரியிடம் பேசினேன். இந்தத் துயர விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்; அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அவர்களை நேரில் சந்திப்பதற்காக, மேற்கு வங்கத்தில் நான் கலந்துகொள்ளவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய அன்னை துர்கையை வேண்டிக்கொள்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

சோர்பகன் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலால், 19 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க, கொல்கத்தா காவல்துறை அக்டோபர் 18 முதல் அக்டோபர் 20 வரை மூன்று நாட்களுக்கு நகரின் பல பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா காவல்துறை இதுவரை ஏழு நபர்களைக் கைது செய்துள்ளது. பூஜை கமிட்டியின் செயலாளர் ராஜ் குமார் சேவ்டா என்கிற ராஜா (48), துணைத் தலைவர் சாந்தனு துபே (55) மற்றும் பந்தல் பணிகளில் ஈடுபட்ட பிப்லாப் முகர்ஜி என்கிற ஜாய் (48), விஐபி அனுமதிச் சீட்டுகளைச் சரிபார்க்கும் பணியிலும் இருந்த கௌசிக் சாஹா (53), கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட பின்டு டே (51), மற்றும் தனியார் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சுமன் சக்ரவர்த்தி (30) மற்றும் ராஜேஷ் பால் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT