இந்தியா

நிலக்கரிச் சுரங்க வழக்கில் பிரதமரை சேர்க்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

நிலக்கரிச் சுரங்க ஓதுக்கீடு முறைகேடு வழக்கில், பிரதமரையும் சேர்க்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். அதேவேளையில், இந்த வழக்கு தொடர்பான புதிய விசாரணை நிலையறிக்கையை, ஜனவரி 9 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பிரதமரைச் சேர்க்கக் கோரி, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரித் துறைக்குப் பொறுப்பு வகித்தபோது முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்று கோரிய அந்த மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோத்தா தலைமையிலான பெஞ்ச், இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், இப்போதே இறுதி முடிவுக்கு வந்துவிட முடியாது என்று குறிப்பிட்டது. முன்னதாக, ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு நிலக்கரிச் சுரஙக உரிமம் வழங்கப்பட்டது தொடர்பாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் பிர்லா, நிலக்கரி துறையின் முன்னாள் செயலாளர் பரேக் உள்ளிட்டோர் மீது சமீபத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து, தான் குற்றச்சதி புரிந்தவர் என்றால், அத்துறையை வைத்திருந்த பிரதமரும் விசாரிக்கப்பட வேண்டியவரே என்று பரேக் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. நிலக்கரிச் சுரங்கத் துறை, பிரதமர் மன்மோகன் சிங்கின் பொறுப்பில் இருந்தபோது, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்படுவதால், அவரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில், சிபிஐ விசாரணையைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தது குறிப்பிடதக்கது.

SCROLL FOR NEXT