வட மாநிலங்களில் பசு பாதுகாப்பு குழுக்கள் என்று கூறி சில கும்பல்கள் மாட்டிறைச்சி உண்பதாகவும், பசுக்களைக் கடத்திச் செல்வதாகவும் சந்தேகித்து ஏராளமானோரைத் தாக்கும் சம்பவங்கள் வெளியாகும் அதே நேரத்தில், 'ஆதர்ஷ் கோ சாலை' என்னும் அமைப்பை நிறுவி, வயதான மற்றும் நோயுற்ற பசுக்களைக் கவனித்துக் கொள்கிறது ஜோத்பூரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அமைப்பு.
2004-ம் ஆண்டில் ஜோத்பூரைச் சேர்ந்த மார்வார் முஸ்லின் கல்வி மற்றும் நல சங்கம் இந்த அமைப்பை நிறுவியுள்ளது.
ஜோத்பூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள புஜாவாட் என்னும் கிராமத்தில் இந்த கோ சாலை அமைந்துள்ளது.
அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து, தனியாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் மூலம் சிறப்புக் குழு உதவியுடன் பசுக்கள் இங்கு வரவழைக்கப்படுகின்றன.
முதல் முஸ்லிம் கோ சாலை
இந்தக் கோ சாலையை முழுக்க முழுக்க முஸ்லிம் சமூகத்தினரே நிறுவி, பராமரித்து வருகின்றனர்.
இங்கு வயதான, தளர்ந்த, நோயுற்ற, கைவிடப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட பசுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 217 கால்நடை விலங்குகள் இங்கே பராமரிக்கப்படுவதாக மாநில அரசின் விலங்குகள் வளர்ப்புத் துறை தெரிவித்துள்ளது.
கால்நடைகளுக்கு மாதம் சுமார் ரூ. 1 லட்சம் செலவிடப்படுவதாக ஆதர்ஷ் கோ சாலை கூறியுள்ளது.
கோ சாலையின் முழு நேரப் பணியாளர் ஹக்கீம் கான் மற்றும் அவரின் மனைவி அல்லாரக்கி இது குறித்துப் பேசும்போது, ''நாய்களும், காட்டு விலங்குகளும் கோ சாலைக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுப்பதே பெரும் பிரச்சினையாக இருக்கிறது. ஆனாலும் பசுக்களையும், எருமைகளையும் பாதுகாப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த கோசாலை அமைக்கப்பட்டுள்ளதாக மற்ற சமூகத்தினர் பாராட்டுகின்றனர். இது எங்களின் வேலையை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது'' என்றனர்.
இத்துடன் ஆதர்ஷ் கோ சாலை அமைப்பு மத நல்லிணக்கத்தை ஊட்டும் வகையில் சுற்றியுள்ள கிராமங்களில் பால் பண்ணைகள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கால்நடைகள் வளர்ப்பு குறித்த ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.