இந்தியா

ஜெ. விடுதலை ஆவார்: ஜெத்மலானி

செய்திப்பிரிவு

சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் ஜெயலலிதா விடுதலை ஆவார் என ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியிடம் ‘தி இந்து'சார்பாக சந்தித்து பேசினோம்.

அப்போது அவர் கூறியதாவது:

“இது நான் எதிர்பார்த்த தீர்ப்பு தான். ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக ஜெயலலிதாவுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நான் என்ன வாதிட்டேனோ அதனைத்தான் எனது நண்பர் நாரிமன் இங்கே வாதிட்டார். உச்ச நீதிமன்றத்தில் நான் ஜெயலலிதாவிற்காக ஆஜராகவிட்டாலும், இவ்வழக்கு குறித்து நன்கு அறிந்தவன் என்ற முறையில் அவருக்கு சில நுணுக்கங்களை தெரிவித்தேன். எனவே, இந்த வெற்றியில் என்னுடைய பங்கும் சிறிதளவேனும் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நீடித்து நிற்கும் தன்மையற்றது. சிறிய அளவிலான குற்றத்துக்கு ரூ.100 கோடி அபராதம் என்பது ஏற்க முடியாது. மேலும், ஜெயலலிதா செய்யாத செலவுகளை எல்லாம் அவர் மீது சுமத்தியுள்ளனர். அதனை நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை. அதே போல ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடத்தின் மதிப்பு, பொருட்களின் மதிப்பு பல மடங்கு அதிகரித்து காட்டப்பட்டுள்ளது. சுதாகரனின் திருமணம், நகைகள் உள்ளிட்ட அவரது நகைகள் ஆகியவையும் மிகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

எனவே உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ மேல் முறையீட்டின் போது இது தெரியவரும். அதன் மூலம் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும். அதற்கு முன்னதாக அவரது தரப்பில் இவ்வழக்கு குறித்து தீவிரமான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்''என்றார்.

SCROLL FOR NEXT