இந்தியா

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: சாத்வி பிரக்யாவுக்கு ஜாமீன்

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் சாத்வி பிரக்யாவுக்கு ஜாமீன் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் முஸ்லிம் மக்கள் நிறைந்த பகுதியில் கடந்த 2008, செப்டம்பர் 29-ம் தேதி நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த சாத்வி பிரக்யா சிங் தாக்கூரை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். குண்டுவெடிப்பு நிகழ்த்த பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் சாத்விக்கு சொந்தமானது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அப்போது அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் மீண்டும் தாக்கல் செய்த ஜாமீன் மனு நீதிபதிகள் ரஞ்சித் மோர், ஷாலினி பன்சால்கர் ஜோஷி உள்ளிட்டோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சாத்வி பிரக்யாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

ரூ.5 லட்சம் பிணைத்தொகையாக செலுத்த உத்தரவிடப்பட்டது. மேலும், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்பட்டைக்குமாறும் சாட்சியங்களை கலைக்க முயற்சிக்கக் கூடாது எனவும் சாத்வி பிரக்யாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT