இந்தியா

காஷ்மீர் பள்ளத்தாக்கு 62-வது நாளாக முடங்கியது: புல்வாமா காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஐஏஎன்எஸ்

ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீர் பள்ளத் தாக்கின் பிற பகுதிகளில் நேற்று பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 62-வது நாளாக முடங்கியது.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கடந்த ஜூலை 8-ம் தேதி பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து கடந்த 2 மாதங்களாக அங்கு வன்முறை நிலவி வருகிறது.

இந்நிலையில் நகரில் நேற்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “காஷ்மீர் பள்ளத் தாக்கின் எந்தப் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வில்லை. என்றாலும் பொது இடத்தில் 4-க்கும் மேற்பட்டோர் கூடுவதற்குத் தடை நீடிக்கிறது.

தலைநகர் நகரில் பழைய நகரம் மற்றும் அப்டவுன் பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளிலும் போதிய அளவில் பாதுகாப்பு படையினர் நிறுத்தப் பட்டுள்ளனர்” என்றார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 62 நாட்களாக கல்வி நிறுவனங் கள், பொதுப் போக்குவரத்து, முக்கிய சந்தைகள் மற்றும் பிற வர்த்தக நிறுவனங்கள் மூடப் பட்டுள்ளன.

காஷ்மீரில் கடந்த ஜூலை 9-ம் தேதி தொடங்கிய வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 3 போலீஸார் மற்றும் 73 சிவிலியன்கள் உயிரிழந்துள்ளனர். பிரிவினைவாதிகள் வாரந்தோறும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 16-ம் தேதி வரை முழு அடைப்பு மற்றும் போராங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதில் வரும் 13-ம் தேதி பக்ரீத் பண்டிகை நாளன்று நகரில் உள்ள ஐ.நா. கண்காணிப்பு அலு வலகம் நோக்கி பேரணி செல்லுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனிடையே தெற்கு காஷ்மீரில் புல்வாமா காவல்நிலையம் மீது நேற்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையே சுமார் 15 நிமிடங்கள் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதையடுத்து தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர்.

காஷ்மீரில் மற்றொரு சம்பவமாக, குல்காம் மாவட்டம், டி.எச். போரா என்ற கிராமத்தில் தேசிய மாநாடு கட்சியின் முன்னாள் வட்டார தலைவரின் வீடு முன்பிருந்த போலீஸ் சாவடி மீது தீவிரவாதிகள் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தினர். பின்னர் அங்கிருந்த 4 துப்பாக்கிகளை எடுத்துச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT