இந்தியா

நாகா தீவிரவாத தலைவர் இசாக் சிஷி மரணம்

செய்திப்பிரிவு

அகண்ட நாகாலாந்து என்ற தனி நாடு கோரி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறைப் பாதையில் போராடி வந்த நாகா தீவிரவாத தலைவர் இசாக் சிஷி சுவு (87) நேற்று மரணம் அடைந்தார்.

நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் (என்எஸ்சிஎன்-ஐஎம்) தலைவரான இவர், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று அவர் மரணம் அடைந்தார்.

நாகாலாந்து மாநிலத்தின் ஜுன்ஹிபோடோ மாவட்டத்தைச் சேர்ந்த அவர் சுமி பழங்குடி இனத்தை சேர்ந்தவர். அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

அகண்ட நாகாலாந்து என்ற தனி நாடு கோரி போராடி வந்த நாகா தேசிய கவுன்சில் (என்என்சி) அமைப்பில் 1950-களில் இசாக் சிஷி சேர்ந்தார். 1980-ல் இது பிளவுபடும் வரை இதில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

மத்திய அரசு - என்என்சி இடையே 1975-ல் ஷில்லாங் உடன்படிக்கை ஏற்பட்டது. இதற்கு எதிராக முய்வாவுடன் இணைந்து என்எஸ்சிஎன் அமைப்பை இசாக் சிஷி தொடங்கினார். ஒரு கட்டத்தில் இதன் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்த அமைப்பு இரண்டாகப் பிரிந்தது. இசாக் சிஷி தலைமையிலான அமைப்பு என்எஸ்சிஎன்-ஐஎம் என அழைக்கப்பட்டது.

இந்திய அரசின் முயற்சியால் இந்த அமைப்புடன் 1997-ல் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT