‘முழு மதுவிலக்கு எனும் சமூகப்பணி’ என்று பிஹார் முதல்வரின் முழு மதுவிலக்கு திட்டத்தை வெகுவாகப் புகழ்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
பாட்னாவில் காந்தி மைதானத்தில் பிரகாஷ் பர்வ் கொண்டாட்டங்களில் சீக்கிய பக்தர்களிடம் பேசிய பிரதமர் மோடி நிதிஷ் குமாரின் முழு மதுவிலக்கு அமலை பாராட்டிப் பேசினார்.
“முன்னோடியான முழு மதுவிலக்கு சமூகப்பணியை மேற்கொண்டதற்காக முதல்வர் நிதிஷ் குமாருக்கு எனது மனம் திறந்த வாழ்த்துக்கள். இது அனைத்து கட்சிகள் மற்றும் பிரிவினரிடையே ஒத்துழைப்புக்காக நிதிஷ் விடுத்துள்ள அழைப்பாகும்.
அரசு மட்டுமோ அல்லது நிதிஷ் குமார் மட்டுமோ இதனை வெற்றியடையச் செய்யாது, இதற்கு மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். எனினும் இத்தகைய மிகப்பெரிய சமூகப் பணியை மேற்கொண்டதற்காக நான் நிதிஷ் குமாரை மனம் திறந்து பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
இந்த விழாவுக்கு நிதிஷ் குமார் தனிப்பட்ட முறையில் கவனம் எடுத்துக் கொண்டு ஏற்பாடுகள் செய்திருக்கிறார் என்பதை நான் அறிகிறேன், இந்த பெரிய விழா வெற்றிபெற அவர் எடுத்துக் கொள்ளும் அக்கறைக்காகவும் அவரை நான் வாழ்த்துகிறேன்” என்றார் மோடி.
இந்தக் கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது இரு மகன்களும் இருந்தனர். முதல் முறையாக பழைய வைரிகளான ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் நெருக்கமடைவதாக செய்திகள் எழத் தொடங்கியுள்ளன.
மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்த கட்சி ஐக்கிய ஜனதா தளம். நிதிஷ் குமாரும் மோடியும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்தவர்கள். ஆனால் மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு நிதிஷ் குமாரிடமிருந்து ஒரு அரிய ஆதரவு கிட்டியதையடுத்து பிரதமர் தற்போது நிதிஷின் ‘சமூகப் பணி’யை பாராட்டுவதாக பிஹார் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.