காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய யூரி மற்றும் நவ்காம் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் யூரி பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது, சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர் திடீரென ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில் 18 வீரர்கள் பலியாயினர். தீவிரவாதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து காஷ்மீர் – பாகிஸ்தான் எல்லையில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். நேற்றுமுன்தினம் நவ்காம் எல்லையில் இருந்து காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 10 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
இந்நிலையில், யூரி மற்றும் நவ்காம் பகுதிகளில் ராணுவ வீரர்கள் இரவு பகலாக தொடர்ந்து 24 மணி நேரமும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். குறிப்பாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவிரவாதிகளின் உடல்களையும் தேடி வருகின்றனர்.
தீவிரவாதிகள் ஊடுருவ வசதியாக எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் இடைவிடாமல் தாக்குதல் நடத்துவது வழக்கம். யூரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் ஊடுருவியதும் அதுபோல் நடந்ததுதான் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், எல்லையில் 2 இடங்களில் ஊடுருவல் முறியடிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது உடல்களை மீட்பது கடினம். ஏனெனில், அடர்ந்த காட்டுப் பகுதி மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகில் இருந்து உடல்களை மீட்பது கடினம் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.