இந்தியா

ஆந்திராவில் வெடிக்கிறது போராட்டம்: பிப்.6 முதல் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

ஆந்திர மாநில மறுசீரமைப்பு மசோதா ஆந்திர சட்டமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதை யடுத்து, அந்த மசோதா திங்கட் கிழமை காலை ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்போது ஆந்திர அரசியல் டெல்லியை மையம் கொண்டுள்ளது.

ஆந்திர மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். வரும் 5-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே தெலங்கானா மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி மேலிடமும் தெலங்கானா ஆதரவாளர்களும் முயன்று வருகின்றனர்.

அதேநேரம், மாநிலத்தைப் பிரிக்கக்கூடாது என வலியுறுத்தி வரும் மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி தனது ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களுடன் செவ்வாய்க்கிழமை டெல்லி செல்கிறார்.

இவர்கள் புதன்கிழமை குடியரசு தலைவரை சந்தித்து, சட்டமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட தெலங்கானா மசோதாவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பக் கூடாது என வலியுறுத்த திட்ட மிட்டுள்ளனர்.

அதற்கு முன்பாக, அன்றைய தினம் டெல்லியில் இந்திராகாந்தி சமாதி அருகே ஆந்திர முதல்வர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநில பாதுகாப்புக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஹைதராபாத்தில் நடந்தது.

இதில் கலந்துகொண்ட சீமாந்திரா பகுதி அரசு ஊழியர்களுடன் கூட்டாக கலந்து ஆலோசித்தனர். பின்னர் அரசு ஊழியர் சங்கத் தலைவர் அசோக் பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது.

தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டால், ராயலசீமா, கடலோர ஆந்திராவில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். குடிநீர், கல்வி, வேலைவாய்ப்பு, மின்சாரம், விவசாயம் போன்ற அனைத்தும் பாதிக்கப்படும்.

ஒரு பிரச்சினையைத் தீர்க்க, இத்தனை பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டுமா? சட்ட மன்றத்தில் நிராகரிக்கப்பட்ட தெலங்கானா மசோதாவை குடியரசுத்தலைவர் நாடாளு மன்றத்திற்கு அனுப்பக்கூடாது. ஒருவேளை அனுப்பினாலும், சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் எம்.பிக்களும் அதை எதிர்த்துப் போராட வேண்டும்.

இதனை வலியுறுத்தி சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் வரும் 5-ம் தேதி முதல் மீண்டும் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் 127 அரசு துறைகளைச் சேர்ந்த சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

ஏற்கனவே இதேபோன்று நடத்திய போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதற்காக எங்களின் வேலை பறிபோனாலும் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படப் போவ தில்லை.

10, 11, 12 தேதிகளில் பந்த்

வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் சீமாந்திரா பகுதி மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களின் வீடு, அலுவலகங்கள் முற்றுகையிடப்படும். 10, 11, 12 ஆகிய தேதிகளில் சீமாந்திரா பகுதியில் பந்த் நடத்தப்படும்.

தேசிய, மாநில நெடுஞ் சாலைகளில் மறியல் போராட்டம், தர்ணா நடத்தப்படும்.

17, 18, 19 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர் சங்கத்தினர் டெல்லிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபடுவர்.

SCROLL FOR NEXT