இந்தியா

பதான்கோட் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த நிரஞ்சனின் தந்தை உருக்கம்

செய்திப்பிரிவு

பதான்கோட் தாக்குதலில் பலியான லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமாரின் தந்தை சிவராஜன் நேற்று கூறியதாவது:

நிரஞ்சன் குமார் என்னுடைய இரண்டாவது மகன். பாலக்காட்டில் பிறந்தான். அவனுக்கு 4 வயது இருக்கும் போதே தாய் ராஜேஸ்வரி இறந்துவிட்டார். எனக்கு பெல் நிறுவனத்தில் வேலைக் கிடைத்த தால் 30 ஆண்டுகளுக்கு முன்னால் பிள்ளைகளுடன் பெங்களூருவுக்கு வந்தேன்.

நிரஞ்சன் குமார் சிறுவயதில் இருந்தே படிப்பிலும், விளையாட் டிலும் சுட்டியாக இருந்தான். இந்தியன் பப்ளிக் பள்ளியில் படிக்கும்போதே தேசிய மாணவர் படையில் சேர்ந்து துப்பாக்கி சுடும் போட்டியில் கோப்பை வென்றி ருக்கிறான். தேசிய மாணவர்ப் படையின் உடையில் எடுத்த போட்டோவை காட்டி, 'அப்பா எனக்கு சதாரண உடைகளை விட, இந்த உடை தானே பொருத்தமாக இருக்கிறது?' என கேட்பான்.

பள்ளியில் அதிக மதிப்பெண் களுடன் தேர்ச்சிப் பெற்ற நிரஞ்சன் எம்.வி. இன்ஸ்ட்டியூட்டில் பி.இ. மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்தான். அங்கும் சிறப்பாக படித்து முடித்ததால், கேம்பஸ் இண்டர்வியூ-வில் பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அதையெல்லாம் வேண்டாமென சொல்லிவிட்டு, மலையேற்ற பயிற்சிக்கு போனான்.

நிரஞ்சன் 2003-ல் தன் விருப்பப்படியே புணேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் தேர்ச்சி பெற்றான். தேசியப் பாதுகாப்பு படையில் வெடிகுண்டு நிபுணராக சேர்ந்தான். 2012-ல் நிரஞ்சனுக்கும், பாலக்காட்டை சேர்ந்த பல் மருத்துவர் ராதிகாவும் திருமணம் நடந்தது. இப்போது ஒன்றரை வயதில் விஸ்வமாயா என்கிற பெண் குழந்தை இருக்கிறாள். கடந்த சனிக்கிழமை காலை போனில் பேசும்போது கூட, ''அப்பா, பதான்கோட் விமானப்படை தளத்துக்கு போகிறேன். நீங்கள் நேரத்துக்கு சாப்பிட்டு, மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளுங்கள். தைரியமாக இருங்கள்''என சொன் னான். நிரஞ்சனின் மரணத்தை தாங்க முடியவில்லை. இருப்பினும் நாட்டுக் காக, அவனது விருப்பப்படியே ராணுவ உடையிலே உயிர்த் துறந் திருக்கிறான். கடைசியாக செப்டம்பர் மாதம் ஓண‌ம் பண்டிகையின் போது வீட்டுக்கு வந்தான். மீண்டும் ஜனவரி 26-ம் தேதி நீண்ட விடுமுறையில் வந்து, பெங்களூருவில் தங்குவதாக சொல்லிவிட்டு போனான். இப்போது பிணமாக வந்திருக்கிறான்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT