சட்டவிரோத வங்கதேச குடியேறிகளைப் பிடிக்கச் சென்ற மும்பை காவல்துறையின் சிறப்புப் பிரிவு போலீஸார்களை திருடர்கள் என்று நினைத்து கிராமத்தினர் தாக்கியதில் 9 பேர் காயமடைந்தனர்.
செவ்வாய்க் கிழமை காலை 3 மணியளவில், வங்கதேசத்திலிருந்து பேலாபூரில் உள்ள கம்பத்பூஜே கிராமத்திற்கு வந்து சட்டவிரோதமாக வசித்து வருபவர்கள் பற்றிய தகவல்களையடுத்து மும்பை காவல்துறையினரின் சிறப்பு காவல்துறை போலீஸார் அங்கு மஃப்டியில் வந்தனர். ஆனால் இவர்களை போலீஸ் என அடையாளம் காணத் தவறிய கிராம மக்கள் இவர்களைத் திருடர்கள் என நினைத்து தாக்கினர், இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர், 6 காவலர்கள், 3 இன்ஃபார்மர்கள் பலத்த காயமடைந்தனர்.
கடந்த 2 மாதங்களாக இந்த கிராமத்தில் நள்ளிரவில் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி வந்ததையடுத்து கிராம மக்களில் சிலர் இரவில் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய போலீஸார் மீது திருடர்கள் என மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து கிராமவாசி ராஜேஷ் கோலி தெரிவிக்கும் போது, “கடந்த 2 மாதங்களாக எங்கள் தூக்கம் பறிபோயுள்ளது. எனவே சில இளைஞர்கள் ரோந்துப் பணி மேற்கொண்டு வந்தனர், இந்நிலையில் வீட்டின் கூரை மீது ஏறுவது, சந்தேகத்திற்கிடமாகும் வகையில் அதிகாலை வேளைகளில் சுற்றிய நபர்களைக் கண்டவுடன் இச்சம்பவம் நடந்துள்ளது. நாங்கள் அவர்களை யார் என்று கேட்டோம், போலீஸ் என்றனர், அடையாள அட்டையைக் காட்டுங்கள் என்றவுடன் வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றைக் காண்பித்தனர். சரி, போலீஸ் வாகனத்தையாவது காட்டுங்கள் என்றோம் அவர்கள் காட்டவில்லை. போலீஸ் என்பதற்கான தகுந்த ஆதாரங்கள் எதையும் அவர்கள் காட்டவில்லை. எனவே ஒட்டுமொத்த கிராமமும் விஷயத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அடித்து விட்டனர்” என்றார்.
இன்னொரு கிராமவாசி தீபாலி கோலி கூறும்போது, “அவர்கள் திருடர்கள் என்றே நாங்கள் இன்னமும் உணர்கிறோம், தற்போது காவல்துறையினர் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர். அவர்கள் போலீஸ் என்பதற்கான ஆதாரம் எதையும் காட்டவில்லை. அவர்கள் திடீரென எதையாவது பீய்ச்சி அடித்து விட்டு குழந்தைகளை கடத்தியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அந்த அணியில் பெண் ஒருவர் ஒரு வீட்டில் பதுங்கியுள்ளார், அவர் போலீஸ் என்றால் ஏன் பதுங்க வேண்டும்?” என்றார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறும்போது, “கம்பத்பூஜே கிராமத்தினர் சில திருடர்களைப் பிடித்துள்ளனர் என்ற தகவல் வந்ததையடுத்து நான் கிராமத்துக்கு சென்றேன். அங்கு சென்று பார்த்தப் பிறகுதான் தெரிந்தது அவர்கள் திருடர்கள் அல்ல மாறாக மும்பை போலீஸ் என்பது. கிராமத்தினரை அடக்க முடியவில்லை, நான் அவர்களிடம் எவ்வளவோ எடுத்துக் கூறினேன் இவர்கள் போலீஸ் அதிகாரிகள் என்று. அவர்களை மீட்க ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. இப்போது காயமடைந்த காவலதிகாரிகளை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்.
கிராமத்தினர் பெண் போலீஸின் ஆடையைக் கிழித்து போலீசாரின் செல்போன்களையும் தூக்கி எறிந்தனர். தடி, பிரம்பு போன்றவை அவர்களை அடிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இவர்கள் தாக்கியதை உள்ளூர் போலீஸ் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
தாக்கியவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.