இந்தியா

விரைவில் வீட்டிற்கு சென்று மகளை காண விரும்புகிறேன் - ஏடிஎம்-மில் தாக்கப்பட்ட பெண் பேட்டி

இரா.வினோத்

ஏடிஎம் மையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் பெண், விரைவில் வீட்டிற்கு சென்று தனது மகளைக் காண விரும்புவதாக பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.முகத்திலும் தலையிலும் பலமாக அடிபட்டு இருப்பதால் இன்னும் சில தினங்கள் சிகிச்சைப்பெற வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த 19-ஆம் தேதி ஜோதி உதய்(38) என்கிற வங்கி ஊழியர் பெங்களூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.இவரை தாக்கிய அதே கொள்ளையன் ஆந்திராவில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஒரு பெண்ணை கொலை செய்துள்ளான் என்பதற்கு ஆதாரமாக சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியானது. கர்நாடக, ஆந்திரா மாநில போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதிலும் இன்னும் குற்றவாளியை நெருங்கமுடியவில்லை.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான ஜோதி உதய் பெங்களூர் பி.ஜி.எஸ்.மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சைப் பெற்றுவந்தார். பலத்த காயமடைந்திருந்த அவர், மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் மெல்ல மெல்ல தேறி வந்தார்.

உம்மன்சாண்டி ஆறுதல்

ஏடிஎம் மையத்தில் தாக்கப்பட்ட வங்கி ஊழியர் ஜோதி உதய் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர்.இந்த தகவலை அறிந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவரை வியாழக்கிழமை பி.ஜி.எஸ். மருத்துவமனைக்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.அப்போது ஜோதி உதய் விரைவில் குணமடைய இறைவனை இறைவனை பிரார்த்திப்பதாக கூறினார்.

ஜோதி உதய் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் வெள்ளிக்கிழமை அவரை செய்தியாளர்கள் சந்திக்க பி.ஜி.எஸ்.மருத்துவமனை ஏற்பாடு செய்தது.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது ஜோதி உதய் மிகவும் பலவீனமாக காணப்பட்டார்.

அவர் பேசுகையில்,''நான் நலமாக இருக்கிறேன்.விரைவில் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.என்னைக் காணாமல் 'அம்மா..அம்மா''என கண்ணீரோடு காத்திருக்கும் எனது மகளை காண விரும்புகிறேன்.எனக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்த மீடியாவிற்கு எனது நன்றிகள்''என சுருக்கமாக கூறிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார்.

ஒரே வாரத்தில் டிஸ்சார்ஜ்

இதனைத் தொடர்ந்து ஜோதி உதய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வெங்கடரமணா பேசினார். ''ஜோதி உதய்யின் முகத்திலும், தலையிலும் பலத்த அடிபட்டு இருந்தது. அதனால் அவருக்கு முகத்திலும், மூளைக்கு அருகிலும் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்தோம்.மேலும் அவரது மூளைக்கு அருகே பெரும் காயம் ஏற்பட்டு இருந்ததால் அவரது வலப்புறம் உடல் செயல்படாமல் இருந்தது. ஆனால் இப்போது வலது கை,கால் எல்லாம் மெல்ல செயல்படுகின்றன.

அவர் நலம் பெற ஆறு மாதங்கள் ஆகும் என நினைத்தேன். ஆனால் சில தினங்களிலே குணமாகி பேச ஆரம்பித்துவிட்டார். அவரது உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மிகுந்த வியப்பை அளிக்கிறது.இன்னும் ஒரே வாரத்தில் அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து விடுவோம். அதன் பிறகு மூன்று மாதங்கள் பிசியோதெரபி பயிற்சி எடுக்க வேண்டும்'' என்றார்.

SCROLL FOR NEXT