மக்களவைத் தேர்தலின்போது எனக்காக சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் ஆகியோர் பிரச்சாரம் செய்வார்கள் என்று கிரிக்கெட் வீரர் முகமது கைப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் புல்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கைப் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் அலாகாபாதில் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுவர கிரிக்கெட் எனக்கு வாய்ப்பு அளித்தது. மகாராஷ்டிரம் மற்றும் தென்மாநிலங்களுக்குச் செல்லும் போதெல்லாம் விளையாட்டு கட்டமைப்பில் உத்தரப் பிரதேசம் மிகவும் பின்தங்கியிருப்பதை என்னால் உணர முடியும்.
எனது சொந்த மாநிலத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. எனது சொந்த ஊரான அலகாபாதில் திறமையுள்ள ஏராளமான விளை யாட்டு வீரர்கள் உள்ளனர். அவர் களில் பலருக்கு முறையான பயிற்சி வசதிகள் இல்லை.
அவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்று தவித்து வந்தேன். இப்போது காங் கிரஸ் வேட்பாளராக களம் இறங்கியிருப்பதன் மூலம் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.
சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் ஆகியோரிடம் வாழ்த்துப் பெற்றுள்ளேன். எனது தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் எனக்கு உதவுவார்கள் என்று பெரிதும் நம்புகிறேன்.
மூன்று பேரும் எனக்காக ஆதரவு திரட்ட இங்கு வருவதாக உறுதி அளித்துள்ளனர். எனக்காக ஆதரவு திரட்டுவதற்காக இதர கிரிக்கெட் வீரர்களையும் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன்.
அரசியல் என்பது முழுநேர பணி என்பதை தெரிந்துதான் அதில் இறங்கியுள்ளேன். பொது வாக கிரிக்கெட்டில் நான் அதிகம் சிக்ஸர், பவுண்டர் அடிப்பது இல்லை. ஆனால் ஒன்று, இரண்டு என்று ஓடி ஓடி ரன்களைக் குவித்துவிடுவேன். அரசியலில் அதே பாணியை பின்பற்றுவேன்.
ரஞ்சி, ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இனிவரும் சூழலைப் பொறுத்து அறிவிப்பேன் என்றார் முகமது கைப்.