இந்தியா

கோவா கட்டிட விபத்து: விசாரிக்க மூவர் குழு அமைப்பு

செய்திப்பிரிவு

கோவா மாநில அரசு, 17 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான கட்டிட விபத்து குறித்து விசாரிக்க 3 நபர் குழுவை அமைத்துள்ளது. சம்பவ இடத்துக்கு அருகே உள்ள 2 கட்டிடங்கள் சாய்ந்த நிலை யில் இருப்பதால் மீட்புப் பணி கைவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியதாவது:

கன்கோனா நகரில் இடிந்து தரைமட்டமான கட்டிடத்துக்கு அருகில் உள்ள மேலும் 2 கட்டிடங் கள் ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் உள்ளன. இவற்றில் ஒன்றில் விரிசல் விழுந்துள்ளது. ஒருவேளை இந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும்.

எனவே, மீட்புப் பணியை நிறுத்திக் கொள்ளுமாறு சம்பந் தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருந்தாலும் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு குறைவு. எனவே, இடிபாடுகளை அகற்றுவதற்கு முன்பு அதன் அருகில் அபாயகரமான நிலையில் உள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டி உள்ளது.

இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை ஆராயவும், எதிர்காலத்தில் இது போன்ற விபத்து ஏற்படுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கவும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே. ஜா தலைமையில் 3 பேர் அடங்கிய குழு அமைக்கப் பட்டுள்ளது.

இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்களான பாரத் ரியல்டர்ஸ் நிறுவனத்தின் ஜெய்தீப் சைகல், பிரதீப் சிங் பைரிங் மற்றும் விஷ்வாஸ் தேசாய் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். விசாரணை முடியும் வரை அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டுமான திட்டங்களை நிறுத்தி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு அனுமதி வழங்கிய உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

சனிக்கிழமை இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளி லிருந்து இதுவரை 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. - பி.டி.ஐ.

SCROLL FOR NEXT