எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.) வீரர் தேஜ் பகதூர் யாதவை அவரது மனைவி சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று பி.எஸ்.எப். படைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பணியாற்றி வரும் பி.எஸ்.எப். வீரர் தேஜ் பகதூர் யாதவ், வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக சமூக வலைதளம் மூலம் அண்மையில் குற்றம் சாட்டினார்.
இதன் காரணமாக தேஜ் பகதூர் துன்புறுத்தப்படுவதாகவும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் மனைவி ஷர்மிளா ஊடகங்களிடம் தெரி வித்தார். இந்த விவகாரம் தொடர் பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இம் மனு நீதிபதிகள் சிஸ்டானி, வினோத் கோயல் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பி.எஸ்.எப். படை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், தேஜ் பகதூர் யாதவ் காணாமல் போகவில்லை, அவர் வேறு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ராணுவ வீரர் தே்ஜ் பகதூர் யாதவை மனைவி ஷர்மிளா சந்திக்கவும் 2 நாட்கள் உடன் தங்கியிருக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று பி.எஸ்.எப். படைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.