இந்தியா

குப்பை இல்லாத தேர்தல் பிரசாரம்: மோடி, ராகுலுக்கு வேண்டுகோள்

செய்திப்பிரிவு

திரும்பும் பக்கம் எல்லாம் மேடை பேச்சுகள், சுவரொட்டிகள், பிட் நோட்டீசுகள் இவை தேர்தல் சீசன் களைகட்ட தொடங்கியதற்கான அறிகுறி.

ஒரு பெரிய திடலில், லட்சக்கணக்கானார் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சாரமோ, பேரணியோ முடிந்த பிறகும் அங்கு நிறைந்து இருப்பது அதில் கலந்து கொண்டோர் விட்டுச் சென்ற குப்பை குவியல்களாகவே இருக்கும்.

பிரசாரம், பேரணிகளுக்கு மக்கள் கூட்டத்தை கருத்தில் கொள்ளும் அரசியல் தலைவர்கள் சுற்றுப்புற சுகாதாரம் பற்றி கவலை கொள்வதாக தெரியவில்லை என்பதையே, அப்படி சிதறிக் கிடக்கும் குப்பை உணர்த்துவதாக, இமேஜ் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குப்பைகள் இல்லாமல் தேர்தல் பிரசாரம் நடந்தால் எப்படி இருக்கும்? இதையே, 'இமேஜ் இந்தியா' தன்னார்வ தொண்டு நிறுவனம் வலியுறுத்துகிறது.

இந்தியாவில் போதிய அளவில் கழிப்பிடங்கள் அமைக்கப்பட வேண்டும், சுகாதாரமான சுற்றுச்சூழல், தூய்மையான நதிகள் ஆகியவற்றை அமைக்க அரசியல் தலைவர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் ஆகியன இந்நிறுவனத்தின் கோரிக்கைகளாக இருக்கின்றன.

சுற்றுப்புற தூய்மையை கடைபிடிப்பதையும், தேர்தல் அறிக்கையில் ஒரு கொள்கையாக அரசியல் கட்சிகள் பட்டியிலிட வேண்டும் என வலியுறுத்துகிறது 'இமேஜ் இந்தியா'.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, பா.ஜ.க., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களின் போது சுற்றுப்புற தூய்மைக்கும் முன்னுரிமை அளித்து, தொண்டர்களுக்கும் இதனை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதாக 'இமேஜ் இந்தியா' தலைவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT