சர்ச்சைக்குள்ளான இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் என்ஜிஓ அமைப்பின் உரிமத்தைப் புதுப்பிக்க உதவிய மத்திய உள்துறை அதிகாரிகள் 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட் டுள்ளனர்.
இளைஞர்களைத் தீவிரவாத நடவடிக்கைகளுக்குத் தூண்டு வதாகவும், அதற்காக வெளி நாடுகளில் இருந்து பெருந் தொகையைப் பெற்றுவருவதாக வும், இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
சர்வதேச இஸ்லாமிய தொலைக்காட்சி சேனலான ‘பீஸ் டிவி’ மூலம், தீவிரவாதத்துக்கு ஆதரவான கருத்துக்களைப் பரப்புவதோடு, மற்ற மதங்களை இழிவுபடுத்தியும் வரும் அவருக்கு எதிராக பிரிட்டன், கனடா, மலேசியா நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, மும்பை காவல்துறை விசாரித்து வருகிறது. உள்துறை அமைச்சகம் சார்பிலும் தனி விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், மும்பை உட்பட பல இடங்களில் ஜாகிர் நாயக் சார்பில் நடத்தப்பட்டு வரும், ‘இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்’ என்ற என்ஜிஓ அமைப்புக்கு அண்மையில் உரிமம் புதுப்பித்துத் தரப்பட்டுள்ளது.
வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில், அவரின் என்ஜிஓ அமைப்புக்கு உரிமம் புதுப்பிக்க உதவியதால், மத்திய உள்துறை இணை செயலாளர் ஜி.கே.திவிவேதி, 2 துணை செயலாளர்கள் மற்றும் ஒரு பிரிவு ஆலுவலர் ஆகிய 4 பேரை மத்திய அரசு பணி இடைநீக்கம் செய்துள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இத் தகவலை உறுதி செய்தார்.