முதலீட்டாளர்களுக்கு ரூ. 25 ஆயிரம் கோடியைத் திருப்பி அளித்தது எப்படி? என்று சஹாரா குழுமத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை முதலீட்டாளர்களுக்கு ரொக்கமாக திருப்பி அளித்துள்ளீர்கள் என்பதை ஜீரணிப்பதே கடினமாக உள்ளது. இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து கிடைத்தது. வங்கியிலிருந்து எடுத்தீர்களா? சொத்தை விற்று அதன் மூலம் கிடைத்ததா என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
உங்களுடைய பணம் திரட்டும் திறன் குறித்த சந்தேகம் இல்லை. ஆனால் இவ்வளவு பெரிய தொகை திரட்டியது எப்படி என்று விளக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
குழுமத்தின் பிற நிறுவனங் களிலிருந்து திரட்டினீர்களா அல்லது வேறு திட்டங்கள் மூலம் ரூ. 24 ஆயிரம் கோடி திரட்டப்பட்டதா? வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப் பட்டதா? அல்லது சொத்தை விற்று பணத்தைத் திரட்டினீர்களா? இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றின் மூலமாகத்தான் பணம் திரட்டியிருக்க முடியும். நிச்சயமாக பணம் வானத்திலிருந்து விழுந்திருக்க வாய்ப்பில்லை. எனவே பணம் எங்கிருந்து வந்தது என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, ஏ.கே. சிக்ரி ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளித்ததற்கான ஆவணங் களை தாக்கல் செய்யுங்கள். இன்னும் பிற திட்டங்களுக்கு அளிக்க வேண்டிய பணம் எவ்வளவு உள்ளது என்ற விவரத்தை அளியுங்கள். இது தொடர்பான முழுமையான தகவலை செப்டம்பர் 16-ம் தேதி அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அவர் அளித்த மனுவில் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் சஹாரா குழுமம் பணத்தை திரும்ப அளித்துவிட்டது. ஆனால் பங்கு பரிவர்த்தனை வாரியம் செபி கோடிக்கணக்கான முதலீட்டாளர்களை அடையாளம் காணாமல் உள்ளது என்று சுட்டிக் காட்டியிருந்தார்.
சஹாரா குழுமத்தின் வாதம் எதுவாக இருந்தாலும், செபி மிகவும் எளிதான ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. உங்களுக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது. பணம் கிடைத்த விதத்தை தெரிவித்தால் இந்த வழக்கை முடித்து விடலாம் என்று நீதிபதிகள் கேட்டனர்.
சஹாரா குழுமம் பணம் திரட்டிய விவகாரம் தொடர்பாக எத்தகைய விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது. ஒரு வேளை கருப்புப் பணம் வெளிக் கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால் அதை வருமான வரித்துறையினர்தான் விசாரிக்க வேண்டுமே தவிர, செபி விசாரிக்கக் கூடாது என்று கபில் சிபல் வாதாடினார்.
ஆனால் நீதிபதிகள், மிகப் பெரிய தொழில் குழுமம் பணம் திரட்டிய விதத்தைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது என்றும். இது கணக்கில் காட்டப்பட்ட பணமா? அல்லது கணக்கில் வராததா? என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்றார்.