இந்தியா

பிஹாரில் முறைகேடுகளைத் தடுக்க பள்ளி தேர்வு விண்ணப்பங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க திட்டம்

செய்திப்பிரிவு

முறைகேடுகளை தடுப்பதற்காக, நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு விண்ணப்பங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க பிஹார் பள்ளி தேர்வு வாரியம் (பிஎஸ்இபி) திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பிஎஸ்இபி தலைவர் ஆனந்த் கிஷோர் கூறும்போது, “பொதுத் தேர்வு விண்ணப்பங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள துணைத் தேர்வின்போது இது அமல்படுத்தப்படும். இதன் படி, தேர்வு விண்ணப்பத்தில் ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஆதார் எண் பெறாதவர் கள் உடனடியாக பெற வேண்டும் என அறிவுறுத்தப்படுவர்” என்றார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை பாட்னா சென்றிருந்த தனித்துவ அடையாள ஆணைய (யுஐடிஏஐ) இயக்குநர் ஜெனரல் அஜய் பூஷனுடன் கிஷோர் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தேர்வு விண்ணப்பத்தில் ஆதார் எண்ணை குறிப்பிடுவதால், ஒரே நபர் 2 விண்ணப்பங்களை சமர்ப்பித்தால் அதை எளிதில் கண்டறிய முடியும். இதன்மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்று பிஎஸ்இபி கருதுகிறது.

பிஹாரில் கடந்த கல்வி ஆண்டில் நடந்த பொதுத் தேர்வில் மிகப்பெரிய அளவில்முறைகேடு நடந்தது தெரியவந்தது. குறிப்பாக, சில பாடங்களில் முக்கிய இடங்களைப் பிடித்தவர்களுக்கு பாட அறிவு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT