இந்தியா

ஜெ. வழக்கில் கர்நாடக அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இணைக்கப் பட்டுள்ள 6 தனியார் நிறுவனங்களுக்கு எதிராக கர்நாடக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் கடந்த 7-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் இணைக்கப்பட்டுள்ள மெடோ அக்ரோ ஃபார்ம், ரிவர்வே அக்ரோ புரொடக்ட்ஸ், லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ், சிக்னோரா எண்டர்பிரைசஸ் ஆகிய 6 நிறுவனங் களுக்கு எதிராக கர்நாடக அரசு தரப்பில் நேற்று எழுத்துப்பூர்வ‌ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா இந்த ஆவணங்களை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலக‌த்தில் தாக்கல் செய்தார்.

இதில், ‘இந்த 6 தனியார் நிறுவனங்களும் ஜெயலலிதா தரப்பின் பினாமி நிறுவனங்கள் ஆகும். எனவேதான் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தனியார் நிறுவனங்களை சொத்துக்குவிப்பு வழக்கில் இணைத்தது. ஆனால் கர்நாடக உயர் நீதிமன்றம் எவ்வித விளக்கத்தை முன்வைக்காமல், 6 தனியார் நிறுவனங்களையும் வழக்கில் இருந்து விடுவித்தது. ஜெயலலிதா தரப்புக்கு சொந்தமான இந்த நிறுவனங்களை விடுவிக்காமல், அவற்றின் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும்’ என உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை உதாரணம் காட்டி குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT