ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் விமானப் படைக்கு சொந்தமான மிக்-27 ரக போர் விமானம் நேற்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.
ஜோத்பூரில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து இந்த விமானம் நேற்று காலை புறப்பட்டது. விமானி ஒருவர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் காலை 11.30 மணி அளவில், ஜோத்பூர் நகரின் குரி என்ற இடத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் பூட்டப்பட்டிருந்த ஒரு வீடு சேதம் அடைந்தது. விமானம் கீழே விழுந்தவுடன் தீப்பற்றி எரிந்தது. தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதனிடையே விமானம் தரையில் விழுவதற்கு சில வினாடி களுக்கு முன்பு விமானி, பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார்.
விமான இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதே விபத்துக்கு காரண மாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.