வெளிநாட்டிலிருந்து முறைகேடாக பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், வரும் பிப். 24-ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது, வெளிநாட்டிலிருந்து முறைகேடாக நிதி நன்கொடை பெற்றதாக ஆம் ஆத்மி கட்சி மீதும், அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் மீதும் பொது நல வழக்கு தொடர்ப்பட்டது.
சில தினங்களுக்கு முன் நடந்த இவ்வழக்கின் விசாரணையில், மத்திய அரசு சார்பில் பேசிய வழக்குறிஞர் ராஜீவ் மேகரா, ஆம் ஆத்மி கட்சி நிதி நன்கொடை விவரங்களை தம்மிடம் தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
உயர்நீதிமன்ற நோட்டீஸை ஏற்றுக்கொண்ட பிரசாந்த் பூஷண், மத்திய அரசின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். கடந்த விசாரணையின்போது, மத்திய அரசு தவறான அறிக்கை அளித்ததாகவும், ஆம் ஆத்மி கட்சி அனைத்து விவரங்களையும் அளித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் பேசிய மேகரா, "ஆம் ஆத்மி கட்சி எந்தவொரு நிதி விவரங்களையும் தெரிவிக்கவில்லை என்று நான் கூறவில்லை. அவர்களது வங்கி விவரங்களை அளிக்கவில்லை என்றே கூறினேன்" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று விசாரித்த நீதிபதி பிரதீப் நந்த்ரஜோக் தலைமையிலான அமர்வு, வரும் பிப். 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை பிப். 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.