இந்தியா

தேஜ்பால் வீட்டில் கோவா போலீஸ் சோதனை: விரைவில் கைது?

செய்திப்பிரிவு

பாலியல் புகாரில் சிக்கியுள்ள தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் வீட்டில் கோவா போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு நேற்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்குள் கோவா போலீஸ் முன் ஆஜராகுமாறு தேஜ்பாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், கெடு முடிவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் தேஜ்பால் கோவா போலீசுக்கு அனுப்பிய ஃபேக்ஸில் போலீஸ் முன் ஆஜராக கூடுதல் அவகாசம் கோரியிருந்தார். ஆனால், அவரது இந்த கோரிக்கையை கோவா போலீசார் நிராகரித்தனர். பனாஜி முதலாவது நீதிமன்றம் நீதிபதி சரிகா ஃபல்தேசாய் தேஜ்பாலுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்தார்.

எந்த நேரத்திலும் கைது :

இதனையடுத்து தருண் தேஜ்பால் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இன்று காலையில் தேஜ்பால் வீட்டில் சோதனை நடத்த போலீசார் வந்த போது அவர் அங்கு இல்லை. இதற்கிடையில் கோவா செசன்ஸ் நீதிமன்றத்தில் தேஜ்பால் இன்று ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்வார் என்றும் வழக்கு விசாரணையை கோவாவில் இருந்து வேறு ஒரு மாநிலத்திற்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SCROLL FOR NEXT