இந்தியா

மக்களவையில் இருந்து 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட்

பிடிஐ

மக்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதாகக் கூறி, மொத்தம் உள்ள 44 காங்கிரஸ் எம்பிக்களில் 25 பேரை அடுத்த 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சுமித்ரா மகாஜன் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளார். மக்களவைத் தலைவரின் இந்த நடவடிக்கை ‘ஜனநாயகத்துக்கு கறுப்பு தினம்’ என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை நேற்று காலை கூடியதும், பல்வேறு மாநிலங்களில் புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியதும் 30-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் கையில் பதாகையை ஏந்தியபடி அவையின் மையப் பகுதிக்குச் சென்று அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

மக்களவை தலைவர் எச்சரிக்கை

அப்போது லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, வியாபம் ஊழல் புகாரில் சிக்கிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது இருக்கைக்கு அருகே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தார்.

பதாகைகளை காட்ட வேண்டாம் என்றும் இருக்கையில் அமருமாறும் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் பல தடவை கேட்டுக்கொண்டார். இதைப் பொருட்படுத்தாத அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, 25 எம்பிக்களின் பெயரைக் குறிப்பிட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுமித்ரா எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவர்களை அவை விதி எண் 374(ஏ)-ன் கீழ் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து சுமித்ரா மகாஜன் கூறும்போது, “அவையில் பதாகை களை காட்டக்கூடாது என்று எச்சரித்த போதும் விடாப்பிடியாக, அவை நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பதாகைகளை காட்டி வேண்டுமென்றே போராட் டத்தில் ஈடுபட்டதால் 25 காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுகின்றனர்” என்றார்.

இதையடுத்து மக்களவைத் தலைவர் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். எனினும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேற மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். சோனியா காந்தியும் சிறிது நேரம் அவையிலிருந்து வெளியேற மறுத்தார். பின்னர் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

9 கட்சிகள் புறக்கணிப்பு

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆதரவு தெரிவித்து, 5 நாட்களுக்கு அவையைப் புறக்கணிக்கப் போவதாக திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆர்எஸ்பி, முஸ்லிம் லீக், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி ஆகிய 9 கட்சிகள் அறிவித்துள்ளன.

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் சுமித்ரா மகாஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்களவையை சுமுகமாக நடத்த என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். அது நடக்கவில்லை. பல தடவை எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எல்லையை மீறி செயல்பட்டதால் எம்பிக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்” என்றார்.

SCROLL FOR NEXT