இந்தியா

லாலுவின் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சிகளுடன் இணைய பகுஜன் தலைவர் மாயாவதி சம்மதம்

ஆர்.ஷபிமுன்னா

மக்களவை தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கு வளர்ந்து வரும் செல்வாக்கு எதிர்க்கட்சிகளை கலங்கடித்துள்ளது. கடைசியாக, உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியால் எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைய முடிவு செய்துள்ளன. கடந்தமுறை உ.பி.யை ஆட்சி செய்த சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ்சிங் யாதவ், பாஜகவுக்கு எதிராக தங்களுடன் கைகோர்க்குமாறு பரமவிரோதியான மாயாவதிக்கு அழைப்பு விடுத்தார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி இதற்கு பதில் ஏதும் அளிக்கவில்லை. இதுபோன்ற சூழலில் ஒன்றிணையும் எதிர்க்கட்சி களுடன் கைகோர்க்கும் வழக்கம் மாயாவதிக்கு இல்லை.

இந்நிலையில், வரும் ஜூலை யில் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேச்சு நடத்தி வருகிறார். இந்த அணியை வலுவான கூட்டணியாக்கி 2019 மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்ப்பது அவரது திட்டமாகும். இதற்கு முன்பாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு வரும் ஆகஸ்ட் 27-ல் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து பாட்னாவில் மாபெரும் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார். இதற்காக அவர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், திமுக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய லோக் தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அழைத்துள்ளார். இவர்களில் மாயாவதி உட்பட பெரும்பாலானோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் ராஷ்ட்ரிய ஜனதா தள வட்டாரம் கூறும்போது, “இக்கூட்டத்துக்கு சோனியா, ராகுல், நிதிஷ், தேவ கவுடா, மம்தா பானர்ஜி, சரத்பவார், சீதாராம் யெச்சூரி, மு.க.ஸ்டாலின், அகிலேஷ்சிங் என பலரும் வர சம்மதித்துள்ளனர். மாயாவதி யும் எங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதித்து விட்டார். இந்த கூட்டத்துக்குப் பிறகு வரும் மக்களவைத் தேர்தலுக்கான ஒரு வலுவான கூட்டணி அமையும். மக்களவைத் தேர்தலில் மாயாவதியும் அகிலேஷும் உ.பி.யில் ஒன்றாகப் போட்டியிட்டு பாஜகவை தோற்கடிப்பார்கள்” என்றார்.

கடந்த மக்களவை தேர்தலில் உ.பி. உட்பட பல்வேறு மாநிலங் களில் போட்டியிட்ட மாயாவதி கட்சிக்கு ஓரிடம் கூட கிடைக்க வில்லை. உ.பி.யை 3 முறை ஆட்சி செய்த மாயாவதிக்கு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 19 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மாயாவதி யின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடிவடைய உள்ளது. இப்பதவியை திரும்பப் பெறும் அளவுக்கு அவருக்கு எம்எல்ஏக்கள் பலம் இல்லை. எனவே இதுவரை எந்தப் பிரச் சினையிலும் எதிர்க்கட்சிகளுடன் சேராத மாயாவதிக்கு தற்போது சேரவேண்டிய கட்டாயம் ஏற்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.

உ.பி. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவர், “மதவாத சக்திகளை முறியடிக்க உருவாகும் கூட்டணி யில் சேர பகுஜன் சமாஜுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்றார். எனினும் அகிலேஷ் அழைப்புக்கு செவிசாய்க்காத மாயாவதி, தற்போது லாலுவின் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சி களுடன் கைகோர்க்க உள்ளார்.

SCROLL FOR NEXT