தனி தெலங்கானா மாநிலம் உரு வாக வேண்டும் என்ற பிரார்த் தனை நிறைவேறியதால், வரும் 22-ம் தேதி திருப்பதி ஏழுமலை யானுக்கு ரூ.5.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேர்த்திக் கடனாக செலுத்தவுள்ளார்.
ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திராவில் இருந்து தனி தெலங்கானா மாநிலம் உதயமானால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தங்க நகைகளை காணிக்கையாக வழங்குவதாக நேர்ந்து கொண் டார். தற்போது தனி தெலங்கானா மாநிலம் உருவாகிவிட்டதால் தனது நேர்த்திக் கடனை செலுத்துவதற்கு சந்திரசேகர ராவ் முடிவெடுத்துள்ளார்.
அதன்படி வரும் 22-ம் தேதி திருமலைக்கு செல்லும் அவர், ஏழுமலையானுக்கு ரூ.5.5 கோடி மதிப்புள்ள தங்க நகை களை காணிக்கையாக செலுத்தவுள்ளார். அதில் 14.9 கிலோ எடை யில் சாலக்கிராம ஹாரம், 4.65 கிலோ எடையில் 5 வரிசை கொண்ட தங்க காசு மாலை உள்ளிட்ட நகைகள் இடம்பெற்றுள்ளன.
தெலங்கானா அரசு சார்பில் இந்த நேர்த்திக் கடன் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நகைகளுக்கான செலவுத் தொகை அரசு கருவூலத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வாரங்கலில் உள்ள பத்ரகாளி அம்மனுக்கு தங்க கிரீடமும், வீரபத்ர சுவாமிக்கு தங்க மீசையும், விஜயவாடா கனக துர்கை அம்மனுக்கு தங்க மூக்குத்தியும் சந்திரசேகர ராவ் காணிக்கையாக செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.