தேவயானி விவகாரத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க மறுப்பது குறித்து கருத்து தெரிவிக்க மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மறுத்துவிட்டார். மாறாக, இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும், இந்தியா-அமெரிக்கா நட்புறவை பாதுகாப்பதும் அவசியம் என்றார்.
இந்தியத் துணை தூதர் தேவயானியை மீட்கும் வரை நாடாளுமன்றத்திற்குச் செல்லப்போவதில்லை என சூளுரைத்த சல்மான் குர்ஷித், தற்போது இந்தியா-அமெரிக்கா உறவு பாதுகாக்கப்பட வேண்டும் என மழுப்பலாக பதில் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் பேசுகையில், "தேவயானி விவகாரம் தொடர்பாக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தர்க்க ரீதியான முடிவு எட்டப்படும்" என்றார்.
இப்போதைக்கு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியுடன் பிரச்சினை குறித்து ஆலோசிப்பது தான், தனது தலையாய கடமை எனவும் தெரிவித்தார்.
இந்தியா- அமெரிக்கா நட்புறவை பாதுகாப்பது அவசியம், இவ்விவகாரத்தை அணுகும் இரு நாடுகளும் தமக்கு இடையேயான மொத்த உறவின் ஆதாரத்தையும் கவனத்தில் கொள்ளுதல் அவசியம் என்றார்.
மன்னிப்பைத் தவிர அமெரிக்காவிடம் இருந்து வேறு எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவாரத்தைக்குப் பின்னர் தர்க்க ரீதியான முடிவு கிடைக்கும் என குர்ஷித் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.