இந்தியா

2013-ம் ஆண்டில் திருப்பதி வசூல் ரூ.723 கோடி; 1,200 கிலோ தங்கம்

செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில்பக்தர்கள் கடந்த 2013-ம் ஆண்டு ரூ.723 கோடி பணம் மற்றும் 1,200 கிலோ தங்கம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். தெலங்கானா பிரச்சினையால் 50 லட்சம் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: எழுமலையான் கோயிலில் கடந்த 2013-ம் ஆண்டும் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை 1.96 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். ஆனால் இது கடந்த ஆண்டுகளை விட குறைவு. தெலங்கானா பிரச்சினை காரணமாக பஸ், ரயில்கள் இயங்காததால் சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தாலும், ஏழுமலையானின் ஆண்டு வருவாய் குறையவில்லை.

கடந்த ஆண்டு சராசரியாக தினமும் 65 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்கள் மூலம் மொத்தம் ரூ.723 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் டிசம்பர் மாதம் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.78 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு

மார்ச் 31-ம் தேதி, ஒருநாள் மட்டும் ரூ.3 கோடியே 29 லட்சத்து 35,000 உண்டியல் வசூல் ஆகியுள்ளது. இதுவே கடந்த ஆண்டின் அதிகபட்ச ஒருநாள் வருவாயாகும். மேலும் கடந்த ஆண்டில் 1,200 கிலோ தங்க நகைகளை உண்டியல் மூலமாகவும், நேரடியாக அதிகாரிகள் வழியாகவும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

பக்தர்கள் செலுத்தும் தலைமுடி காணிக்கைகள் ஆண்டுதோறும் ஆன்லைன் ஏலத்தில் டெண்டர்கள் மூலம் வெளி நபர்களுக்கு விற்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மட்டும் கடந்த ஆண்டு ரூ.260 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் முடிக் காணிக்கை ஏலம் மூலம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.540 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT