தீபாவளியையொட்டி மத்தியப் பிரதேச மாநிலத்தில் ‘ஹிங்கோட் யுத்’ என்ற பெயரில் இரு தரப்பினர் இடையே நடைபெற்ற பட்டாசு வீசும் யுத்தத்தில் 74 பேர் காயமடைந்தனர்.
இந்தூர் மாவட்டம் தேபால்பூரில் உள்ள மைதானத்தில் இந்த பட்டாசு யுத்தம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. தேபால்பூரின், கௌதம்புரா மற்றும் ரூடஜி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 200 ஆண்கள், இரு அணிகளாக பிரிந்து எதிரெதிரே நிற்கின்றனர். அனைவரின் கைகளிலும் ராக்கெட் உட்பட பல வகையான பட்டாசுகள். அவற்றை கொளுத்தி எதிர்புறம் இருப்பவர்கள் மீது ஆவேசமாக வீசுகிறார்கள். தங்களை நோக்கி வரும் ராக்கெட் மற்றும் பட்டாசு களிடம் இருந்து இரு அணியினரும் லாவகமாக ஓடி தப்புகிறார்கள்.
இதில், தீக்காயமடைபவர்கள் கவலைப்படுவதில்லை. மாறாக, தான் அதிர்ஷ்டக்காரர்கள் என சந்தோஷப்படுகிறார்கள். இப்படி, காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை ஒன்று, இரண்டு, மூன்று,... என ஐம்பதையும் தாண்டுகிறது. இதை எதிர்பார்த்து அவர்களுக்கு உடனுக்குடன் மருந்திட்டு சிகிச்சையளிக்க மருத்துவர் குழு அருகிலேயே தயாராக உள்ளது. சிகிச்சை பெற்றவர்கள், ‘பட்டாசு போரில்’ இருந்து விலகுவதில்லை. மாறாக, காயம்பட்ட இடத்தில் கட்டுப்போட்டுக் கொண்டு மீண்டும் களம் இறங்கி விடுகிறார்கள். ஆண்டுதோறும் தீபாவளிக்கு மறுநாள் நடைபெறும் இந்த பட்டாசு சண்டையை, அக்கம் பக்கம் உள்ள நகரங்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.
இது குறித்து தி இந்துவிடம் பார்வையாளரான தேபால்பூர்வாசி கிருஷ்ண சந்த் துபே கூறியது: ‘இதற்கு இதிகாச ஆதாரங்கள் இல்லை. இடைக்கால இந்திய வரலாற்றில் முகலாயர்கள் படை எடுத்தபோது, அவர்களை இந்தப் பகுதி மக்கள் ஹிங்கோட் காய்களால் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதை, தொடர்ந்து தீபாவளிக்கு மறுதினம் பட்டாசு சண்டை நடை பெறுகிறது.
அறுபது ஆண்டுகளாக நான் பார்த்து ரசித்து வருகிறேன். இதில், கலந்து கொண்டால் ஆண்டு முழுவதும் நமக்கு வரும் கோபங்களை முன் கூட்டியே வெளிப்படுத்தி விடலாம். பிறகு அடுத்த தீபாவளி வரை நம் வாழ்க்கை அமைதியாகவும், நல முமாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை. இதில், பட்டக் காயத் தில் இருந்து வெளியாகும் ரத்தத் தின் மூலம், அவர்களுடைய பாவங்கள் தீர்ந்து போவதாகவும் ஒரு நம்பிக்கை’ எனப் பெருமிதம் கொள்கிறார்.
ஒரு சிறப்புப் பூஜை யுடன் ஹிங்கோட் யுத்தத்தை தொடங்கி நடத்த தனியாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.