அரசியல் கட்சிகளின் ரொக்க நன்கொடை வசூலுக்கு மத்திய பட்ஜெட்டில் கடிவாளம் போடப்பட்டுள்ள நிலையில் ஆண்டுதோறும் டிசம்பருக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுவதை கட்டாயமாக்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
இது குறித்து மத்திய வருவாய் துறை செயலர் ஹஸ்முக் ஆதியா நேற்று கூறியதாவது:
வருமான வரி செலுத்துவதில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் குறித்த நேரத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில்லை. 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருமான கணக்கு தாக்கல் செய்கின்றன. இதை முறைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நிதி மசோதா வாயிலாக சட்ட திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.
வரி விலக்கு கிடைக்காது
இந்தச் சட்டத்தின்படி வரு மான வரி கணக்கு தாக்கல் செய்யாத அரசியல் கட்சி களுக்கு, வருமான வரி விலக்கு அளிக்கப்படமாட்டாது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சி களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து அவர்களது வரி விலக்கு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.