உச்ச நீதிமன்றத்தின் 41-வது தலைமை நீதிபதியாக ராஜேந்திர மல் லோதா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம், கடந்த 26-ம் தேதியுடன் ஓய்வு பெற்றதை யடுத்து, ஆர்.எம்.லோதா புதிய தலைமை நீதிபதியாக பொறுப் பேற்றுள்ளார். ஆர்.எம்.லோதா இந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார்.
பதவியேற்பு நிகழ்ச்சியின் போது ஆர்.எம்.லோதா செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
நீதிபதிகள் நியமன நடைமுறையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கான பதவிக்காலம் குறிப்பிட்ட கால அளவில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் தேவையில்லை.
நீதிபதிகளை நியமிப்பதற்கு முன்பு, மற்ற மூத்த நீதிபதிகள், வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் நியமனக் குழு ஆலோசனை நடத்த வேண்டும். நீதிபதிகள் நியமனக் குழுவில், கூடுதலாக 3 மூத்த நீதிபதிகள், 3 மூத்த வழக்கறிஞர்களை சேர்ப்பது குறித்து வலியுறுத்தி வருகிறேன்.
இவ்வாறு ஆர்.எம். லோதா கூறினார்.