உ.பி.யின் கவுதம்புத் நகர் மாவட்டம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பிஸ்ராக் தாம் கிராமத் தில் ராதாகிருஷ்ணா கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் ராவணன் சிலை பிரதிஷ்டை செய்ய அப்பகுதி மக்கள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இதற்கு முதல்நாள் இரவு கோயில் வளாகத்தில் நுழைந்த மர்ம நபர்கள், அங்கு பிரதிஷ்டை செய்ய வைக்கப்பட்டிருந்த ராவணன் சிலையை உடைத்து அப்புறப்படுத்திவிட்டனர். இது தொடர்பாக பிஸ்ராக் தாம் கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் கிரேட்டர் நொய்டா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சிலையை உடைத்ததாக அருகிலுள்ள காஜியாபாத்தின் தூதேஷ்வர்நாத் கோயில் தலைமை பூசாரி நாராயண் கிரி, பூசாரி கிருஷ்ணா கிரி, சதீஷ் நாகர், ஹரீஷ் சந்திரா நாகர் மற்றும் பசு பாதுகாப்பு தளம் தலைவரான சுரேந்திரா நாத் உட்பட 30 பேர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பிஸ்ராக் தாம் கிராமத்தினர், நேற்று கூடி விவாதித்தனர். அப்போது, கோயிலில் ராவணனுக்கு புதிய சிலை வைப்பது எனவும் மேலும் ராமர் மற்றும் கிருஷ்ணர் குடும்பத்தின் சிலைகளை வைப்பது என்றும் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் மஹாத்மா ராவணன் அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா அசோகா னந்த் கூறும்போது, “பிஸ்ராக் தாம் கிராமத்தில் ராவணன் பிறந்ததாக இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இந்த கிராமம் தொடர்பான குறிப்புகளும் வேதங்களில் இடம் பெற்றுள்ளன. இதனால் ராவணனை பிஸ்ராக் கிராமவாசிகள் பூஜித்தும் வரு கின்றனர். இவர்கள் நம்பிக்கையை போற்றும் வகையில் இங்கு ராவணனுக்கு கோயில் கட்ட நாங்கள் முடிவு செய்துள்ளோம். எந்தவித எதிர்ப்பு வந்தாலும் அதை மீறி நாங்கள் கோயில் பணியை செய்து முடிப்போம்” என்றார்.
ராவணனுக்கு கோயில் கட்டுவதில் சிவ்மோகன் யோகம் கோயில் அறக்கட்டளையினரும் உதவி செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ராவணன் சிலை வைப்பது தொடர்பாக காஜியாபாத் தலைமை பூசாரி தூதேஷ்வர் நாத் கூறும்போது, “ராவணன் ஒரு தீயசக்தியாக கருதப்படுகிறார். எனவே, அவரது சிலையை மேற்கு உ.பி.யின் எந்த இடத்திலும் நிறுவ அனுமதிக்க மாட்டோம்” என அறிவித்தார்.
ராமாயணத்தின் நாயகர் ராமனின் மனைவியான சீதாவை கடத்தியதால் அவருக்கு எதிரி யானவர் ராவணன். அரக்கனான ராவணன் கொல்லப்பட்ட தினத்தை வட இந்தியர்கள் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர்.
வட இந்தியாவில் ராவணனுக்கு கோயில் கட்ட முயற்சிப்பது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே உ.பி.யின் கான்பூர், ராஜஸ்தானின் ஜோத்பூர் ஆகிய இடங்களில் எதிர்ப்புகளை மீறி ராவணனுக்கு கோயில் கட்டி மக்கள் வணங்கி வருகின்ற னர்.