வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த பட்டியலில், தொழிலதிபர்கள் பிரதீப் பர்மன், பங்கஜ் சிமன்லால் லோதியா, ராதா எஸ். திம்ப்லோ ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக, உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக் கப்பட்டுள்ளது.
கருப்புப் பணம் மீட்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள மூன்று தொழிலதிபர்களின் பெயர்களை சமர்ப்பித்துள்ளார்.
மத்திய அரசு சார்பில் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கருப்புப் பணம் பதுக்கி வைத் துள்ளவர்களை பாதுகாக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. வெளிநாடுகளில் இந்தியர்கள் வைத்துள்ள எல்லா வங்கிக் கணக்குகளுமே சட்ட விரோதமானவை என்ற முடிவுக்கு வர முடியாது. வருமான வரித்துறை சார்பில் வரி ஏய்ப்பு குறித்த முகாந்திரம் இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்தால் மட்டுமே அந்த கணக்கு விவரங்களை வெளியிட முடியும்.
விசாரணையில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களை தருவதற்கு சுவிட்சர்லாந்து வங்கி முன்வந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கிவைத்திருந் ததாக கூறப்படும் மூன்று தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
டாபர் இந்தியா லிமிடெட் முன்னாள் இயக்குநர் பிரதீப் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஜி டிரேடிங் கம்பெனி தலைமை மேம்பாட்டாளர் பங்கஜ் சிமன்லால் லோதியா, கோவாவைச் சேர்ந்த சுரங்க தொழிலதிபர் ராதா எஸ். திம்ப்லோ ஆகியோரது பெயர் களை மத்திய அரசு தெரி வித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த தொழில திபர்கள் தங்கள் மீதான குற்றச் சாட்டை மறுத்துள்ளனர். அனைத்து சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டே கணக்கு தொடங்கப் பட்டுள்ளது என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவையில் இடம்பெற்ற நான்கு மத்திய அமைச்சர்கள் கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் பட்டியலில் இருப்பதாகவும், அது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.