உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பிப்ரவரி 4-ம் தேதிக்கும் மார்ச் 8-ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் தனி திட்டங்களை அறிவிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் உத்தரப் பிரதேசத்துக்கு நேரடி பாதிப்பு ஏற்படும்.
மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லாமல் போனால் வளர்ச்சி தடைபடுவதுடன் 20 கோடி மக்களின் நலனுக்கும் பாதிப்பு உண்டாகும். 2012-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச்சில் அப்போதைய அரசு அந்த நேரத்தில் நடந்த தேர்தல் காரணமாக பட்ஜெட்டை ஒத்திவைத்தது.
உத்தரப் பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தேர்தல் முடியும் வரை மத்திய பட்ஜெட் தாக்கலை ஒத்தி வைக்கலாம். எனது கருத்து ஏற்கப்பட்டால் மக்கள் நலனும் மாநில வளர்ச்சியும் தடைபடாது.
இவ்வாறு அகிலேஷ் தெரிவித் துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை ஒத்தி வைக்கக் கோரி உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு அண்மையில் தள்ளுபடி செய் யப்பட்டது நினைவுகூரத்தக்கது.