மைசூர் கடைசி மகாராஜா ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நண்பகலில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60.
மைசூரின் கடைசி மகாராஜா கண்டதத்த உடையார் பெங்களூரில் உள்ள அவரது அரண்மனையிலும்,மைசூரில் உள்ள அவரது அரச இல்லத்திலும் மனைவி மகாராணி பிரமோத தேவியுடன் வசித்து வந்தார். செவ்வாய்க்கிழமை காலை முதலே லேசான காய்ச்சலால் உடல்நலக்குறைவுடன் இருந்தார். நண்பகல் 1 மணி அளவில் உணவு அருந்திய சிறிது நேரத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். மறைந்த மகாராஜாவுக்கு ராஜமரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.