இந்தியா

உ.பி.யில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிந்து 4 பேர் பலி

பிடிஐ, ஐஏஎன்எஸ்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் இறந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

மீரட் நகரின் கன்டோன்மென்ட் நிர்வாகப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையாக, பல மாடி கட்டிடம் ஒன்றை கன்டோன் மென்ட் போர்டு அதிகாரிகள் நேற்று காலை இடிக்கத் தொடங்கினர். அப்போது சிலர் கட்டிடத்திலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில் கட்டிடம் திடீரென முழுவதும் இடிந்து விழுந்ததில் இவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து நடந்த மீட்புப் பணியில் 4 பேரின் உடல்கள் மீட் கப்பட்டன. இதுகுறித்து கன்டோன்மென்ட் போர்டு உதவிப் பொறியாளர் பியூஷ் கவுதம் கூறும்போது, “இந்த கட்டிடத்தை காலி செய்யுமாறு அதில் வசித்தவர்களுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் கொடுத்து விட்டோம். இந்தக் கட்டிடம் இடிப்பதற்காக அடையாளம் இடப்பட்டு, அதிகாலை 3 மணிக்கு இதற்கான பணியை தொடங்க முடிவு செய்திருந்தோம். என்றாலும் அதில் இருந்தவர்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொள்ள மேலும் 3 மணி நேரம் அவகாசம் வழங்கினோம். காலை 6 மணிக்கு தான் கட்டிடத்தை இடிக்கத் தொடங்கினோம்” என்றார்.

லாரி மோதி 6 பேர் பலி

இதனிடையே உ.பி.யின் பல்லியா மாவட்டம், சுக்புரா சவுரகா அருகே நேற்று அதிகாலை காலி எரிவாயு உருளைகள் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி ஒன்று, எதிரில் வந்த கார் மீது மோதி, பின்னர் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது. இதையடுத்து அருகில் உள்ள கடை மீது மோதி நின்றது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

படம்: பிடிஐ

SCROLL FOR NEXT