இந்தியா ஆஸ்திரேலியா இடையே, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உட்பட 6 ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாயின. பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் இடையே டெல்லியில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். அவருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதையடுத்து இருநாட்டு பிரதிநிதிகள் இடையிலான உயர் நிலைக் கூட்டம், பிரதமர் மோடி, மால்கம் டர்ன்புல் தலைமையில் ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது.
அப்போது இரு தரப்பு உறவுகள் குறித்தும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நலன் சார்ந்த மற்றும் கவலை தரக்கூடிய பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக பேசினர். இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு இருநாடுகள் இடையே, பயங்கரவாத எதிர்ப்பு ஒத் துழைப்பை வலுப்படுத்துவது உட்பட 6 ஒப்பந்தங்கள் கையெழுத் தாயின.
பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித் தனர். இரு நாட்டு உறவுகளை முழுவதும் மறு ஆய்வு செய்ததாக வும் பல முன்னோக்கு முடிவுகளை எடுத்ததாகவும் இருவரும் கூறினர்.
இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மையை வலியுறுத்திய பிரதமர் மோடி, பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு போன்ற சவால்களுக்கு சர்வதே அளவிலான உத்தி மற்றும் தீர்வு அவசியம் என்றார்.
இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறிய நிலையில், தனது அரசு இதற்கான ஏற்பாடுகளை வெகு விரைவில் செய்யும் என்று டர்ன்புல் கூறினார்.
ஆஸ்திரேலிய பிரதமராக மால்கம் டர்ன்புல் கடந்த 2015 அக்டோபரில் பதவியேற்ற பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.