இந்தியா

பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ரக்சிதா: மண்டியாவில் ரம்யாவை எதிர்த்துப் போட்டி?

இரா.வினோத்

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய நடிகை ரக்சிதா, பெங்களூரில் வியாழக்கிழமை பா.ஜ.க.வில் இணைந்தார். மண்டியா தொகுதியில் சீட் வழங்கினால் ரம்யாவை எதிர்த்து போட்டியிட தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ரக்சிதா. தமிழில் நடிகர் விஜய்யுடன் 'மதுர' திரைப்படத்திலும், நடிகர் சிம்புவுடன் 'தம்' திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

கன்னடத்தில் வெற்றிப்பட இயக்குநரும், நடிகருமான பிரேமை காதல் திருமணம் செய்துகொண்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சியில் ரக்சிதா இணைந்தார்.

பின்னர், அங்கிருந்து விலகி சில மாதங்களுக்கு முன்னர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். அக்கட்சி யின் தலைவர் தேவகவுடா, மண்டியா தொகுதியில் போட்டி யிட ரக்சிதாவுக்கு வாய்ப்பு அளிக்காததால், இப்போது பாஜகவில் அவர் இணைந் துள்ளார். பெங்களூரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்துக்கு வியாழக்கிழமை ரக்சிதா சென்றார். தேசிய செயலாளர் அனந்தகுமார் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். அவரை முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா வரவேற்று, பா.ஜ.க.உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

பின்னர் ரக்சிதா கூறியதாவது: “எதனையும் எதிர்பார்த்து பா.ஜ.க.வில் இணையவில்லை. பா.ஜ.க. தலைவர்கள் எனக்கு வழங்கும் பணியை செய்வேன். மண்டியாவில் போட்டியிட வாய்ப்பு அளித்தால், தற்போதைய எம்.பி. ரம்யாவை நிச்சயம் தோற்கடிப்பேன்.

இந்த முறை வாய்ப்பு வழங்காவிட்டாலும், வரும் காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் நேரடியாக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக கர்நாடகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்வேன்'' என்றார்.

மண்டியா தொகுதி எம்.பி.யான ரம்யா கூறுகையில்,''ரக்சிதா பா.ஜ.க.வில் இணைந்தது தவறான முடிவு என நினைக்கிறேன். மண்டியா தொகுதியில் ரக்சிதா போட்டியிட்டால் அவரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT