இந்தியா

ஊழல் பெருச்சாளிகளை மட்டுமல்ல, சுண்டெலியைக்கூட சிறைக்கு அனுப்ப முடியாது: லோக்பால் மசோதா - கேஜ்ரிவால் கிண்டல்

செய்திப்பிரிவு

மாநிலங்களவையில் திருத்தங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ள லோக்பால் மசோதா பலவீனமானது, அந்த மசோதாவால் ஒரு சுண்டெலியைக் கூட சிறைக்கு அனுப்ப முடியாது என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் போதும் என்று அன்னா ஹசாரே அறிவித்திருப்பது மிகவும் வருத்தத்துக்கு உரியது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் நிருபர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா, ஊழலை எந்த விதத்திலும் தடுக்காது, மாறாக ஊழல்வாதிகளைக் காப்பாற்றும். லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு தனிஅமைப்பு உருவாக்கப்பட்டால் அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு நபர்கூட தண்டிக்கப்பட மாட்டார்.

இதை அறுதியிட்டுக் கூறுகிறேன். அமைச்சர்கள் உள்ளிட்ட ஊழல் பெருச்சாளிகள் மட்டுமல்ல, ஒரு சுண்டெலியைக்கூட சிறைக்கு அனுப்ப முடியாது. மசோதா நிறைவேற்றப்பட்டால் காங்கிரஸுக்கு ஆதாயம். மசோதாவை நிறைவேற்றிய பெருமை முழுமையாக ராகுல் காந்தியை போய் சேரும்.

சிபிஐ-க்கு சுதந்திரம் தேவை

சிபிஐ சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பாக மாற்றப்பட வேண்டும். அதுகுறித்து லோக்பால் மசோதாவில் எந்த விதியும் இல்லை. எனவே ஊழல் வழக்குகளில் ஒரு நபர்கூட தண்டிக்கப்பட மாட்டார். கடந்த 50 ஆண்டு கால சிபிஐ வரலாற்றில், இதுவரை 4 அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே அந்த அமைப்பு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளது.

அந்த வழக்கிலும் அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் உத்தரவுபடியே சிபிஐ செயல்பட்டது. சிபிஐ-க்கு சுதந்திரம் அளிக்கப்பட்டால் 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளில் பிரதமர் மன்மோகன் சிங்கை கைது செய்யும் வாய்ப்புகள்கூட உருவாகும்.

ஹசாரே முடிவால் வருத்தம்

இப்போதைய லோக்பால் மசோதா வெறும் ஜோக்பால் மசோதாவாக மட்டுமே உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் போதும், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வேன் என்று அன்னா ஹசாரே அறிவித்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை ஆம் ஆத்மி கட்சியின் போராட்டம் தொடரும் என்றார்.

இதுதொடர்பாக சமூக வலைத்தளமான ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ள கெஜ்ரிவால், அன்னா ஹசாரேவை சிலர் தவறாக வழிநடத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT