இந்தியா

போலி பாஸ்போர்ட் வழக்கில் சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

போலி பாஸ்போர்ட் வழக்கில் சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் மீது மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கொலை, கொள்ளை, கடத்தல் உட்பட 85-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. போலீஸ் தீவிரமாகத் தேடியதால் 1989-ல் இந்தியாவில் இருந்து துபைக்கு அவர் தப்பினார். ஆரம்பத்தில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளியாக இருந்த சோட்டா ராஜன் 1993-ல் தனியாகப் பிரிந்து சென்றார்.

கடைசியாக ஆஸ்திரேலியா வில் தலைமறைவாக வாழ்ந்த அவர் அங்கிருந்து 2015 அக்டோபர் 25-ம் தேதி இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு வந்தபோது அந்த நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

முதல்கட்ட விசாரணையில், மோகன் குமார் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் பெற்று அவர் வெளிநாட்டுக்குத் தப்பி சென்றிருப்பது தெரியவந்தது. இதற்கு பெங்களூரு பாஸ்போர்ட் அலுவலகத்தின் அப்போதைய ஊழியர்கள் ஜெய தத்தாத்ரே, தீபக் நட்வர்லால் ஷா, லலிதா லட்சுமணன் ஆகியோர் உதவியுள்ளனர்.

இதுதொடர்பாக சோட்டா ராஜன் மற்றும் ஓய்வு பெற்ற 3 பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்றுமுன்தினம் 4 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி வீரேந்திர குமார் கோயல் அறிவித்தார். அவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி நேற்று வெளியிட்டார்.

அதன்படி சோட்டாராஜன் உட்பட 4 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT