உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், மாநிலத்தில் பசுவதை கூடங்களை மூடுவதற்கு செயல் திட்டம் வகுக்கும்படி போலீஸா ருக்கு உத்தரவிட்டுள்ளார். அத் துடன் வெளிமாநிலங்களுக்குப் பசு கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். சட்ட விரோதமாக நடக்கும் பசுவதைக் கூடங்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், முசாபர்நகரில் கடந்த சனிக்கிழமை மாநில அமைச்சர் சுரேஷ் ரானாவுக்கு பாராட்டு விழா நடந்தது. இந் நிகழ்ச்சியில் கடாவ்லி தொகுதி பாஜக எம்எல்ஏ விக்ரம் சய்னி பேசும்போது, ‘‘வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே சொல்ல தயங்கு பவர்களின் கை, கால்களை உடைப்பேன் என்று நான் உறுதி அளித்திருக்கிறேன். அதேபோல் பசுக்களைக் கொல்பவர்களையும் அவற்றை மதிக்காதவர்களின் கை, கால்களையும் உடைப்பேன். பசுக்களைத் தங்கள் தாய் போல மதித்து போற்ற வேண்டும். அப்படி செய்யாதவர்களின் கை, கால்களை உடைப்பேன். இதை நிறைவேற்ற எங்களிடம் இளைஞர் படை உள்ளது’’ என்றார். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு முசாபர் நகரில் கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக விக்ரம் சய்னி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.