இந்தியா

காஷ்மீர் மக்களின் போராட்டங்களை அடக்குமுறையால் தடுக்க முடியாது: இந்தியா மீது பாகிஸ்தான் காட்டம்

சுகாசினி ஹைதர்

காஷ்மீரில் கட்டற்ற சட்டவிரோத அதிகாரத்தை அப்பாவி பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படைகள் கட்டவிழ்த்து விடுகிறது என இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் புர்ஹான் முஷாபர் வானி (22) கடந்த 8-ம் தேதி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து கடந்த 9-ம் தேதி காஷ்மீரில் கலவரம் வெடித்தது.

தொடர்ந்து அங்கு கலவரம் நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் தூண்டுதலாலேயே வன்முறை கட்டுக்கடங்காமல் செல்வதாக இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது.

நவாஸ் தாக்கு:

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் காஷ்மீர் கலவரம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், "காஷ்மீரில் கட்டற்ற சட்டவிரோத அதிகாரத்தை அப்பாவி பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படைகள் கட்டவிழ்த்து விடுவது அவர்களது உரிமைப் போராட்டத்தை ஒடுக்கிவிடாது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமையை நிலைநாட்ட போராட்டங்களை நடத்துகின்றனர், எனவே படைகளின் அடக்குமுறைகளால் அவர்கள் போரட்டத்தை தடுக்க முடியாது" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் புர்ஹான் வானியின் மரணம் நீதிசாரா படுகொலை எனக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில் பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திரா சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, "காஷ்மீர் வன்முறையில் பாகிஸ்தானுக்கு பங்கு இருக்கிறது என்பதற்கு அந்நாடு விடுக்கும் அறிக்கைகளே சான்று. இதற்கு முந்தைய காலகட்டங்களிலும் பாகிஸ்தான் இந்திய மண்ணில் தீவிரவாதத்தை ஊக்குவித்துள்ளதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே, காஷ்மீர் கலவரத்தில் பாகிஸ்தான் பங்கு இருப்பதை நம்புவதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன" என்றார்.

ஹிஸ்புல் முஜாகிதீன் அறிக்கை:

ஹிஸ்புல் முஜாகிதீன் அறிக்கையில் காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு பாகிஸ்தான் அரசு வெளிப்படையாக முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையது கோரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது கண்டனத்தை பதிவு செய்தது கவனத்துக்குரியது.

SCROLL FOR NEXT