ராணுவத்தில் நிலவும் குறைபாடுகள் குறித்து சமூக வலைத்தளத்தில் புகார் தெரிவித்த ராணுவ வீரர் பிரதாப் சிங் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
எல்லை பாதுகாப்புப் படையில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக அந்த படையைச் சேர்ந்த வீரர் தேஜ் பகதூர் யாதவ் அண்மையில் சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தரைப்படையில் பணியாற்றி வரும் பிரதாப் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், உயரதிகாரிகளின் காலணிகளை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதாப் சிங்கின் மனைவி ரிச்சா சிங், போபாலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ராணுவத்தில் நிலவும் குறைபாடுகளை களையக் கோரி எனது கணவர் கடந்த 4 நாட்களாக உத்தரப் பிரதேசம் பதேகர் முகாமில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக நானும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளேன் என்று தெரிவித்தார்.