குஜராத் மாநிலம் குல்பர்க் சொசைட்டி பகுதியில் 69 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் 2-வது முறையாக நாளைக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது.
அப்போது, குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. மொத்தம் 66 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் விசாரணை காலத்தில் 5 பேர் இறந்துவிட்டனர், ஒருவரைக் காணவில்லை. இவ்வழக்கில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், 36 பேர் விடுவிக்கப்பட்டனர். 24 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களில் 11 பேர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தண்டனை விவரம் 7-ம் தேதி அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், தண்டனை விவரத்தை 9-ம் தேதி (இன்று) அறிவிப்பதாக நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) தண்டனை விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.