தமிழகத்தில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற மனுதாரர்கள் அனைவரும் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என மாநில அரசு எடுத்த முடிவை ஆட்சேபித்து தாக்கல் செய்த மனுவை வெள்ளிக்கிழமை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.
‘இந்த விவகாரத்தில் வழக்கறிஞரின் வேண்டுகோளை ஏற்பது இயலாததாகும். ஒதுக்கீட்டு பிரிவில் வரும் மனுதாரர்களின் தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும்’, என நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு தமது உத்தரவில் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவது அல்லது சலுகை தருவதில் இந்த நீதிமன்றம் அனுமதி தர முடியாது. மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
‘தகுதித் தேர்வில் அனைவரும் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என நிர்ணயித்திருப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் 16(4) பிரிவை மீறுவதாகும், சட்டத்துக்கு புறம்பானதாகும். வகுப்புவாரி இடஒதுக்கீடு முறைப்படி குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்கும்போது அரசமைப்புச் சட்டப்படி தமக்குள்ள கடமையை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்று பேராசிரியர் ஏ.மார்க்ஸ் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
இதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ‘மாநில அதிகாரிகள், நன்கு சிந்தித்தே தகுதி மதிப்பெண்ணை நிர்ணயித்திருக்கிறார்கள். வல்லுநர்களின் கருத்துக்கு பதிலாக தமது கருத்தை நீதிமன்றம் மாற்றி அமைக்க முடியாது. எனவே, இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை. மனு நிராகரிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தது.
முன்னதாக, இந்த விவகாரம் அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது என்று கூறி, எவ்வித நிவாரணமும் தர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.