இந்தியா

இதுதான் சோலார் பேனல் ஊழல்!

இரா.வினோத்

கேரளத்தைச் சேர்ந்த சரிதா நாயர் தன்னுடைய ‘டீம் சோலார் எனர்ஜி கம்பெனி’ என்ற நிறுவனம் மூலம் சோலார் பேனல்களை விற்பனை செய்து வந்தார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘மின் தட்டுப்பாட்டை தடுப்பதற்கு கேரள அரசு சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை வகுத்திருக்கிறது. அந்த திட்டத்தின் மூலம் தோட்டங்களிலும், பண்ணை வீடுகளிலும் சோலார் பேனல்களை பொருத்தி அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு திட்டமிட்டு இருக்கிறது. அவ்வாறு கிடைக்கும் உபரி மின்சாரத்தை அரசே நியாய விலைக்கு வாங்கிக் கொள்ளும். இத்திட்டம் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு மானிய விலையில் உபகரணங்களையும் வழங்க இருக்கிறது. இந்த திட்டத்துக்கான சோலார் பேனல்களை கேரளம் முழுவதும் விற்கும் உரிமையை கேரள முதல்வர் உம்மன் சாண்டி எங்கள் நிறுவனத்துக்கு வழங்கி இருக்கிறார்’ என்று கூறி, கேரள மக்களிடம் முன்பணமாக ரூ.5 லட்சம் முதல் 50 லட்சம் வரை வசூலித்திருக்கிறார் சரிதா நாயர். கேரள முதல்வர் உம்மன் சாண்டி கையெழுத்திட்ட சான்றிதழையும் வாடிக்கையாளர்களிடம் காட்டி பணம் வாங்கியுள்ளார்.

ஆயிரக்கணக்கானோர் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் சோலார் பேனல்கள் ஒருவருக்கும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கோட்டயம் வாடிக்கையாளர் ஒருவர், டீம் சோலார் எனர்ஜி கம்பெனி மீதும், சரிதா நாயரின் மீதும் வழக்கு தொடர்ந்தார். உடனே கேரள காவல்துறை இவ்வழக்கை தீவிரமாக விசாரித்தபோது சரிதா நாயரின் ரூ.10 கோடி மோசடி அம்பலமானது.

இந்நிலையில், “சரிதா நாயரின் சோலார் பேனல் மோசடி சான்றிதழில் உம்மன் சாண்டி கையெழுத்திட்டு இருப்பதால் அவருக்கும் மோசடியில் தொடர்பு இருக்கிறது” என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இதைத் தொடர்ந்து கேரளத்தில் போராட்டங்கள் வெடித்தன. சரிதா நாயரின் நிறுவனத்தை நிர்வகித்து வந்த பிஜூ ராதாகிருஷ்ணனையும் போலீஸ் பிடித்து விசாரித்தனர். அப்போது உம்மன் சாண்டி கையெழுத்திட்ட சான்றிதழை உம்மன் சாண்டியின் உதவியாளர் டெனி ஜோப்பன் என்பவரும் பாதுகாவலர் சலிம் மாலீக் என்பவரும் தயாரித்துக் கொடுத்த உண்மை வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பிஜூ ராதாகிருஷ்ணனின் கூட்டாளியும், டீம் சோலார் எனர்ஜி கம்பெனி நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் நடித்தவருமான ஷாலு மேனனுக்கும் சோலார் பேனல் ஊழலில் தொடர்பு இருந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார்.

முதல்வர் அலுவலகத்தில் என்ன நடக்கிறது என பொதுமக்கள் தொலைக்காட்சியிலே பார்த்து தெரிந்துகொள்ளும் ‘முதல்வர் தரிசனம்’ திட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக உம்மன் சாண்டி அறிமுகப்படுத்தினார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி காட்சியில் சரிதா நாயர் முதல்வர் அலுவலகத்துக்கு வந்து போவது போன்ற காட்சிகளும் பதிவாகி இருந்தன. சோலார் பேனல் விவகாரம் புகைய ஆரம்பித்த நேரத்தில் இந்த காணொளி காட்சிகள் வெளியானதும் உம்மன் சாண்டியின் தலை உருள ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ‘சோலார் பேனல் ஊழலில் உம்மன் சாண்டிக்கும் பங்கு இருக்கிறது’ என சொல்லி முதல்வரை முற்றுகையிட ஆரம்பித்தனர்.

SCROLL FOR NEXT