ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க எடுக்கும் எந்த செயலும் சட்டத்துக்கு புறம் பானதே. தான் எடுத்த முடிவில் முதல்வர் ஜெயலலிதா பிடிவாதம் காட்டினால் தமிழகத்தை குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
ராஜீவ் காந்தி கொலை யாளிகளை விடுதலை செய்வது என தான் எடுத்த சட்டத்துக்குப் புறம்பான முடிவை தமிழக முதல்வர் கைவிடாவிட்டால், அரசமைப்புச் சட்டத்தின் 256வது பிரிவின் கீழ் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு நடக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதை அவர் பொருட்படுத்தாவிட்டால் மாநிலத்தை உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை.அவருக்கு சட்டம் பற்றி ஒன்றும் தெரியாது. சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகள் என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி அறியாமல் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றார் சுவாமி.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லிபயங்கரவாதம் என்பது தேசத்துக்கு எதிரானது. அதைக் கட்டுக்குள் கொண்டு வர கடும் தண்டனை கொடுப்பது அவசியம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிவாரணம் நெறிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல. சரியாக புரிந்து கொள்ளாமல் காட்டப்படும் பரிவுதான் இது.
முன்னாள் பிரதமரை கொன்ற பிறகும் கொலையாளிக்கு கருணை காட்ட சட்ட நடைமுறைகள் மூலம் இடம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என வலைப் பதிவில் ஜேட்லி தெரிவித்திருக்கிறார்.