உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் அதில் சுமார் 189 கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
53 தொகுதிகளுக்கான இந்தத் தேர்தலில் 680 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இதில் 189 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். குறிப்பாக சைல் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரா ரூ.70 கோடி சொத்துள்ளதாக கணக்குக் காட்டியுள்ளதாக ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சுபாஷ் சந்திராவை அடுத்து அலஹாபாத் தெற்கு பாஜக வேட்பாளர் நந்தகோபால் குப்தா நந்தி ரூ.57 கோடி சொத்துகளையும், புல்பூர் தொகுதி பகுஜன் வேட்பாளர் மொகமது மஸ்ரூர் ஷெய்க் ரூ.32 கோடி சொத்துகளையும் வைத்துள்ளனர்.
சமாஜ்வாதி ஜனதா கட்சி (ராஷ்ட்ரிய) வேட்பாளர் இந்திரகர் மிஸ்ரா தனக்கு சொத்துகள் எதுவும் இல்லை என்றும், ராஷ்ட்ரிய விக்லங் கட்சியின் கைலாஷ் என்ற வேட்பாளர் வெறும் ரூ.1000 மட்டுமே தனக்குச் சொந்தம் என்றும் கணக்குக் காட்டியுள்ளனர்.
116 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன, 95 பேர் மீது மிகவும் சீரியசான கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்த 4-ம் கட்ட வாக்கெடுப்பில் 21 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் 3-4 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
680 வேட்பாளர்களில் 60 பேர் பெண்கள். 5 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். 138 வேட்பாளர்கள் முதுகலைப் பட்டப்படிப்பும் 224 வேட்பாளர்கள் இளநிலை பட்டப்படிப்பும் 268 பேர் உயர்பள்ளிப் படிப்பும் படித்தவர்கள். 6 வேட்பாளர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று தங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.