மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மும்பையில் உள்ள மகாலட்சுமி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மோடி பேசினார்.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் முக்கிய பிரமுகர் அருண் தூத்வாத்கர், அந்த மைதானத்தின் வழியாக நேற்று காலை நடைப் பயிற்சி சென்றார்.
மைதானம் முழுவதும் குப்பைகள் நிறைந்திருப்பதைப் பார்த்த அவர், தனது கட்சியின் தொண்டர்களை அழைத்து சுத்தப்படுத்துமாறு கூறினார். துடைப்பம், வாளி சகிதமாக அங்கு வந்த சிவசேனா தொண்டர்கள், மைதானத்தில் இருந்த காலி பாட்டில் கள், கொடிகள், பேனர்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றினர்.
பொது இடங்களையும், அரசு அலுவலகங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், தூய்மையான இந்தியா திட்டத்தை கடந்த 2-ம் தேதி மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில், பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்று தனியாக தேர்தல் களத்தைச் சந்திக்கும் சிவசேனா கட்சியின் தொண்டர்கள், தூய்மையான இந்தியா திட்டத்தை மோடி கூட்டம் நடத்திய மைதானத்தில் செயல்படுத்தி யுள்ளனர்.